×

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலக தமிழ் செம்மொழி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, பண்பாடு, உயர்ந்த சிந்தனை, இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.

அதேபோல், தமிழை உயர்தனி செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர். வளம்பெற்ற நம் மொழிக்கு செம்மொழி தகுதியை பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் கலைஞர். கழக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, பொருநை அருங்காட்சியகத்தையும் அமைப்பது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்கள்.

அந்தவகையில் ‘‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்’’ என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும்.

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்.

* முதல் செம்மொழி மாநாட்டை பிரமாண்டமாக நடத்திய கலைஞர்

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் கலைஞரின் தலைமையில் கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை ‘முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு’ பிரம்மாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டை ஒருங்கிணைக்க 20க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. இம்மாநாட்டிற்கு முப்பாலை குறிப்பிடும் 3 விரல்களுடன் திருவள்ளுவர் சிலையையும், அவரது சிலையையொட்டி மேல் வட்டத்தில் திராவிட நாகரீகமான சிந்துவெளி நாகரீக சின்னங்களும், படகு, கப்பல், காளை – சின்னங்கள் உள்ளிட்ட 7 சின்னங்கள் அடங்கிய இலச்சினையை கலைஞர் வெளியிட்டிருந்தார். மேலும், ‘பிறப்புக்கும் எல்லாம் உயிருக்கும்’ என கலைஞர் எழுதிய பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகின. அந்தவகையில், அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மாநாட்டை தொடங்கி வைத்து 5 நாட்கள் தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலக தமிழ் செம்மொழி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Second World Tamil Classical Conference ,Chennai ,Chief Minister ,M.K.Stal ,M.K.Stalin ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...